இந்தியாவின் ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை இலட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது.
அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளர்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறன நிலையில் 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு ஒரு புதிய உலகளாவிய பொருளாதார கொள்கை (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) எழுச்சி பெற்றது.
புதிய பொருளாதார ஒழுங்கும் ஒரு துருவ உலகமும் (அமெரிக்க ஐக்கிய நாடுகள் மையமாக) இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கு வழிசமைத்தன.
அதனடிப்படையில், இந்தியா உலகப் பொருளாதார மன்றத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் சேர்ந்ததோடு இருதரப்பு, முத்தரப்பு, பலதரப்பு ஒப்பந்தங்களிலும் இணைந்துள்ளது.
அத்தோடு, 1992இல் சீனாவுடனான நட்புறவு – கிழக்கு நோக்கி கொள்கை, 1998இல் பொக்ரான் (ராஜஸ்தானில்) நடைபெற்ற இரண்டாவது அணு சோதனை, பின்னர் இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்தலுக்கான உறவு, அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி ஆற்றல் வள தூதராக உறவு, அமெரிக்காவின் அணு ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்களிப்பு உள்ளிட்ட மாற்றங்களைக் கண்டது.
இந்நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிற நிலையில் தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா எந்தவொரு மிகப்பெரிய இராணுவக் கூட்டணியில் இல்லை என்றாலும் பெரிய நாடுகளுடன் போர்த்திறன் சார்ந்த ஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான பணி இந்தியாவின் உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
இதன் மூலம் இந்தியாவின் பன்முக மதிப்பீடுகளை ஊக்குவிப்பதுடன் இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றங்களை மேம்படுத்த இயலும் என்று கருதுகின்றது.
அதனடிப்படையில், இந்திய வெளியுறவுக் கொள்கை நோக்கில் பொருளாதார வளமே இந்தியா வல்லரசு தன்மை அடைவதற்கான திறவுகோலாகக் காணப்படுகிறது.
தற்போது இந்திய வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உள்முதலீட்டை அதிகரித்தல், வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயற்படுகிறது.
குறிப்பாக, தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இது எளிதாக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் ஒருங்கே உள்ளன.
உலகின் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தியா தனது கொள்கைகளைச் மறுசீரமைத்துள்ளது.
அதாவது, இந்தியாவின் மூலதனங்களுக்கான உள்ளக முதலீட்டை அதிகரித்தல், தொழில்நுட்பயோசனை, வளர்ச்சிக்கான கருத்துகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உலகின் முன்னணி பொருளாதாரங்களுள் ஒன்றாக மறுவெழுச்சி அடைதல் ஆகியவற்றிற்கேற்ப வடிவமைத்துள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்திய முதல் பிரதமர் நேரு போலவே, இதுவரை நாட்டை ஆண்ட அனைத்து பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சியையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளார்.
நேருவுக்குப் பிறகு ஏனைய பிரதமர்களும் வெளியுறவு விடயத்தில் தீர்க்கமாகச் செயற்பட்டாலும், மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், வெளியுறவுக் கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையான மிகவும் சிறப்பான நிலையை எட்டி வருகின்றமை நிரூபனமாகியுள்ள.
இதன்மூலம் சர்வதேச அளவிலான உறவுகளை பலப்படுத்தி உள்நாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இவரது கொள்கையில் முதன்மையானது இந்தியாவின் வளர்ச்சி. அடுத்து ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான யோசனைகளை மேம்படுத்துதலாகும் என்பது உலகத்திற்கே முன்னுதாரணமாகின்றது.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குடன் கூடியதாகவும், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் உலக அரங்கில் வலுப்படுத்துவதாகவுமே அமைந்து வருகின்றன.
அதனடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் அவரது எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.