இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் உள்ளுராட்சித் தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பாக அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பேசிய அவர், மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ள பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பாக ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுவதாகவும் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.