உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பா பலமாக இல்லை என ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை வழங்குவது அமெரிக்காதான் எனவும் அமெரிக்கா இல்லாமல் நாங்கள் சிக்கலில் இருப்போம் எனவும் தெரிவித்தார். ஆகவே ஐரோப்பாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளின் இராணுவப் பங்குகள் உக்ரைனுக்கு வழங்கப்படுவதால், ஐரோப்பிய பாதுகாப்புகளை வலுப்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்தபோது, நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்காக போதிய செலவு செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், சமீபத்திய தசாப்தங்களில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க சில ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை விமர்சித்தார்.
கடந்த பெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, 18.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா, உக்ரைனுக்கு செலவு செய்துள்ளது. இரண்டாவது பெரிய நன்கொடையாளராக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பிரித்தானியா உள்ளது.
ரஷ்யாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, மே மாதம் நேட்டோவில் சேர முறையாக விண்ணப்பித்தது. அணுகல் நெறிமுறைகள் ஜூலையில் கையொப்பமிடப்பட்டன, இருப்பினும் அவை மற்ற அனைத்து உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை.