அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நேற்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபைக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க மாற்று வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சில அமைச்சர்கள் யோசனை முன்வைத்தனர்.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.