பாகிஸ்தான் – பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையரான பிரியந்த குமார இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினர் மத நிந்தனை செய்ததாக கூறிய, தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று கடந்த 3ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாகிஸ்தானின், இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடன, கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ஆம் ஆண்டு முதல் 11ஆண்டுகளாக பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் உள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பிரியந்த குமார தியவடன மேலாளராக கடமையாற்றியுள்ளார்.
இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக சம்பவ தினத்தன்று காலை தகவல் பரவியது. தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்.
நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டு இருந்த நேரத்தில் இந்த பெரும் அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. சம்பவ தினமான வெள்ளிக்கிழமை காலை 11.35 மணி அளவில் மீட்புதவி துறையினருக்கும் பொலிஸாருக்கும் வன்முறை குறித்து தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கு செல்லும் முன்னர் பிரியந்த குமார தியவடன அடிப்படைவாத வன்முறை கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
இலங்கையரான பிரியந்த குமாரவிற்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இறுதியில் மத நிந்தனை என்ற பேரில் அப்பாவி ஒருவரின் உயிரை பாகிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாத குழு இரையாக்கிக் கொண்டுள்ளது. கணவர் படுகொலை செய்யப்படுவதை காணொளிகளில் பார்த்து கடும் வேதனை அடைந்த பிரியந்தவின் மனைவி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்,
‘தனது கணவர் ஓர் அப்பாவி. வெளிநாட்டில் சேவை செய்த போது, மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டதை நான் செய்திகளிலேயே பார்த்தேன். அதன்பின்னர் இணையத்தளத்திலும் அதனை பார்த்தேன். மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி, கணவருக்கும், இரண்டு பிள்ளைகளுக்கும் நியாயத்தை பெற்றுத் தருமாறு இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்’ என பிரியந்த வின் மனைவி நிரோஷி தசநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்க்கத்தனமான. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை உட்பட அனைத்து உலக நாடுகளும் பாகிஸ்தானை வலியுறுத்தின.
மூர்க்கத்தனமான இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பலியான பிரியந்த குமாரவிற்கும் அவரது குடும்பத்திற்கும் இடம்பெற்ற அநீதி மீண்டும் எவருக்கம் இடம்பெற கூடாது என்பதை மானுடத்தை நேசிக்கும் நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் ஒருஇலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்றும் அறிவித்தார்.
அவ்வாறு அறிவித்தவர் இப்போது பதவியில் இல்லை. தற்போது இருக்கின்ற பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவியில் இருக்கின்றார். இவர் இந்த விவகாரம் பற்றி இதுகால வரையிலும் வாய் திறந்ததே இல்லை.
ஆனால் குறித்த சம்பவத்துடன், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேநேரம், பாகிஸ்தானின் சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக சுமார் 2.2 கோடி ரூபாவை சியல்கோட் வர்த்தக சமூகம் வழங்கியிருந்தது.
இதேவேளை, உயிரிழந்த பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவர் பெற்று வந்த சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கும் சியல்கோட் வர்த்தக சமூகம் முடிவு செய்திந்தது.
ஆனால், பொறுப்புக்கூற வேண்டிய பாகிஸ்தான் அரசாங்கம் இன்னம் அமைதியாகவே இருக்கின்றது. மறுபக்கத்தில் தனது நாட்டில் இனவாதத்தினை ஒடுக்கியிருக்கின்றது என்று கூறுவதற்கும் இல்லை.
ஆகவே, பிரியந்த குமாரவின் படுகொலைக்கு பாகிஸ்தான் பொறுப்புக்கூறுவது மட்டுமல்ல, இவ்வாறான இனக்குழுக்களை அந்நாடு முழுமையாக அகற்றுவதற்கு இதுவரையில் நடவடிக்கைகள் எடுக்காது இருக்கின்றமை தான் மிகப்பெரும் துர்ப்பாக்கிய நிலைமையாகும்.