போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வடமாகாண பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. அதனை இல்லாது ஒழிப்பதற்கு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது தனியே பொலிஸாரின் கடமை மாத்திரம் அல்ல. பொலிஸாரினால் மாத்திரம் அவற்றை இல்லாது ஒழிக்க முடியாது. மக்களின் பூரண ஆதரவு பொலிஸாருக்கு கிடைக்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மிக அவதானத்துடன் , விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டும்.
வடமாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் தினமும் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுகின்றனர்.
வடமாகாணத்தில் பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவில்லை. வீதி போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்தல் , சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டுதல் என பல்வேறு செயற்த்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.