நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையானது, நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டடங்களை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், காணி வங்கியொன்றை அமைத்து, காணிகளை உரிய முறையில் பட்டியலிடுவதன் மூலம், காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, அந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.