தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து ஆறுதல் அளிக்கின்றது என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகள் இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கில் தமிழக அரசு, ‘ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல என்றும் உச்சநீதிமன்ற அதிகாரிகள் நேரில் ஒருமுறை வந்து அதை பார்த்து அதை புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் பின்னர் இந்த வழக்கு திகதி குறிப்பிடாமல் ஒத்தி ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வரும் 2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது குறித்து உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி.ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.