டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைக்காது என்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் அதனை பெற்றுக்கொள்ள செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கும் என செப்டம்பரில் அரசாங்கம் கூறியிருந்தாலும் சமீபத்திய மாதங்களில் அதற்கான முன்னேற்றம் மெதுவாக இருப்பதால் ஜனவரி வரை நீடிக்கலாம் என கூறியுள்ளார்.
கடன் வழங்குநர்களிடமிருந்து நிதிகளை பெறுவதற்கு முன்னர் அவர்களிடம் இருந்து நிதியளிப்பு உத்தரவாதங்களைப் பெற வேண்டும் என்பதனால் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய கூட்டுப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான முன்னேற்றம் மற்றும் புதிய தவணைகள் பற்றி விவாதிக்க எதிர்வரும் 22 வரை கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் அதில் இலங்கையை உள்ளடக்கவில்லை.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் 100 வீதம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு தேவையான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.