பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் இல்லம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பிறகு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் பதில் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜெய்சங்கர், இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை உலகம் எதிர்கொண்டு வருகின்றது என்றும் இதன் விளைவாக பலருக்கு நினைவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.ஜெய்சங்கர் சாடியுள்ளார்.
மேலும் தெற்காசியா மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பிராந்தியத்தில் எந்த நாட்டின் தடம் ஏராளமான பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ளது என்பதை உலகம் அறியும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகவே கற்பனையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் பயங்கரவாத நடவடிக்கையில் யார் ஈடுபடுகின்றார்கள் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.