உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டு அதன் அதிகாரங்கள் ஆணையாளர்கள்,செயலாளர்களுக்கு வழங்கப்படுவதனால் உள்ளுராட்சிமன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நிலைமை தொடர்ச்சியாக பிற்போடப்படும் நிலைமை காணப்படுவதனால் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள்,மகளிர் சிவில் சமூக ஆர்வலர்களுக்கான டிஜிட்டல் அறிவினை மேம்படுத்தும் வகையில் முன்னெக்கும் ஜனனி வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கபே அமைப்பு கடந்த ஒரு வருடகாலமாக ஜனனி டிஜிட்டல் அறிவினை மேம்படுத்தும் வேலைத்திட்டம் 15மாவட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள், மகளிர் சிவில் சமூக ஆர்வலர்களுக்கான செயலமர்வு கடந்த மூன்று மாதங்களாக ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்று இறுதி நிகழ்வுடன் இன்று நிறைவுபெற்றது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன், வளவாளராக கலந்துகொண்ட தேர்தல் கற்கைகளுக்கான ஐரேஸ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மற்றும் உள்ளுராட்சிமன்ற பெண் பிரதிநிதிகள் என பலர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு நவீன டிஜிட்டல் தொடர்பான அறிவினை மேம்படுத்தல் மற்றும் அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த நிறைவேற்றுப்பணிப்பாளர், உள்ளுராட்சிமன்றங்களில் உள்ள 80வீதமான பெண்களுக்கு டிஜிட்டல் அறிவு தொடர்பான தேவைப்பாடு உள்ளது.அதிலும் 75வீதமானவர்கள் தனக்கான மின்னஞ்சல்கூட இல்லாதவர்களாகவுள்ளனர்.
இதேபோன்று சமூக ஊடகம் தொடர்பான அறிவுகள் குறைவானவர்களாகவே உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாகவே ஜனனி வேலைத்திட்டம் ஊடாக டிஜிட்டல் ஊடகம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை கபே முன்னெடுத்துவருகின்றது.
இதன்போது தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கும்போது சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,அந்த சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் வெற்றியை நோக்கி எவ்வாறு பயனிக்கமுடியும் என்பது தொடர்பில் பல்வேறு விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களை பொறுத்த வரையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான காலம் கடந்து ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று இலங்கையில் உள்ள மாகாணசபைகளின் காலம் கட்டம்கட்டமாக முடிவடைந்தாலும் கிழக்கு மாகாணசபையின் காலம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ளபோதிலும் அது தொடர்பாக பேசப்படுதில்லை.
மாகாணசபை பொருத்தமற்றது என்று கருதினால் தேர்தல்மூறையிலிருந்து அகற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த மாகாணசபையின் தேர்தல்களை பிற்போடாமல் உடனடியாக நடாத்தவேண்டும்.
இலங்கையினைப்பொறுத்த வரையில் ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களுக்கு ஏற்றவகையில் தேர்தலை முன்னுக்கு நடத்த முற்சிக்கின்றார்கள் இல்லாது விட்டால் முடிந்தவரையில் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர்.
இன்று வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப்பேணக்கூடியவர்களாக நாங்கள் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளைக்காண்கின்றோம்.எந்த தேர்தலாகயிருந்தாலும் அந்ததந்த கட்சிகளின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் ஒரு சாராராக இந்த உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளனர்.
மாகாணசபைகள் பிற்போடப்பட்டதனால் ஏற்படும் விளைவுகளை நாங்கள் தொடர்ந்து அறிந்துவருகின்றோம்.மாகாணசபையின் நிர்வாகங்கள் ஆளுனர்களுக்கு வழங்கப்படும்போது அதன்மூலம் எவ்வாறான நிர்வாகங்கள் நடைபெறுகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இதேபோன்று உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் இல்லாமல் செயலாளருக்கு,ஆணையாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதும் தொடர்ச்சியாக பிற்போடப்படுகின்றது.
அத்துடன் தேர்தல் பிற்போடப்படுதல் ஜனநாயக ரீதியான பிரச்சினையாகும்.
தேர்தல் பிற்போடப்படுதல் ஜனநாயகத்தினை மதிக்காத நாடாக சர்வதேசத்தின் மத்தியில் கரும்புள்ளியாக அமைவோம்.இதன்காரணமாக உடனடியாக தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.