லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், வெளியேற்றுச் சுற்றுப் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் சுற்றுக்கு முன்னேறியது.
கொழும்பு-ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மழைக் குறுக்கிட்டதால், போட்டி 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஹான் ஆராச்சிகே 53 ஓட்டங்களையும் இமாட் வசிம் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹோவ்ல் 3 விக்கெட்டுகளையும் ராஜித மற்றும் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லக்மால் மற்றும் டோமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 109 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் சுற்றுக்கு முன்னேறியகொழும்பு ஸ்டார்ஸ் அணி, இன்றையப் போட்டியில் கண்டி பெஃல்கன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரவி பொபாரா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், நுவான் பிரதீப் மற்றும் இமாட் வசிம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 28 பந்துகளில் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரவி பொபாரா தெரிவுசெய்யப்பட்டார்.