யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போதைப்பொருளுடன் கைதானவர்களிடம் இடம்பெற்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு போதைப்பொருட்களை கொழும்பில் இருந்து ஒருவர் யாழ்ப்பாணத்திற்க்கு கொண்டு வந்து ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 60 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் , அதனை தாம் வாங்கி ஒரு கிராமை 85 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , அவர்களின் விற்பனை வலையமைப்பை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, இவர்களுக்கு போதைப்பொருளை விற்பனைக்காக விநியோகிக்கும் நபர்களை கண்டறிவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.