அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமலேயே பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “பலவருடங்களாக இனப்பிரச்சினைக்கு கிடைக்காத தீர்வு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்குள் அதவது ஒரு மத காலத்திற்குள் கிடைக்குமா என பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமல் தான் நாமும் கலந்துக் கொள்கிறோம். அதனை அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
தீர்வு திட்ட விவகாரத்தில் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை என்ற பழிச்சொல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தான் பேச்சில் பங்கேற்கின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நாம் இதயச்சுத்தியுடன் கலந்துக் கொள்கிறோம்.வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அந்த கால எல்லைக்குள் தீர்வை பெற்றுக் கொடுக்காவிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு பிறகு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தமிழர்களை ஏமாற்றும் வகையில் சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணை தூவினால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
குறுகிய காலத்திற்குள் அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை அறிந்துக் கொண்டு எமமையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் அரசு செயற்பட்டால் தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கத்திற்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இதனை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.