அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள சப்ரூம் என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பலரும் இந்த ராமர் கோவிலுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கியுள்ளனர். இந்திய மதிப்பில் 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெற்று சங்கராந்தி பண்டிகையன்று ராமர் கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.