பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
கராச்சியில் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 449 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவோன் கோன்வே 122 ஓட்டங்களையும் டொம் லதம் 71 ஓட்டங்களையும் மெட் ஹென்ரி ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அப்ரர் அஹமட் 4 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 408 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சவுத் ஷாகீல் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 83 ஓட்டங்களையும் சப்ராஸ் அஹமட் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சவுத்தீ, மெட் ஹென்ரி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 41 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு 319 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் பிளெண்டல் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 74 ஓட்டங்களையும் லதம் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா, ஹம்சா, அப்ரர் அஹமட், ஹசன் அலி மற்றும் ஆகா சல்மன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து 319 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, போட்டியின் இறுதிநாளான நேற்று வரை 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சமநிலையில் முடிவடைந்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சப்ராஸ் அஹமட் 118 ஓட்டங்களையும் ஷான் மசூத் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளையும் சவுத்தி மற்றும் இஷ்சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பாகிஸ்தானின் சப்ராஸ் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.