சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய உரிமை இருக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் பிரகாரமே அதிகாரப்பகிர்வினை கோருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத இந்த சந்தர்ப்பத்தில், இந்த விடயத்தில் அழுத்தங்களை பிரயோகித்து தீர்வைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.