பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவிப் பிரமாணம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை ஜனாதிபதி லுலா பயங்கரவாத செயல்கள் என கண்டனம் செய்தார். அத்துடன் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, வயிற்று வலி காரணமாக புளோரிடாவில் ஆர்லாண்டோவுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி 2018ஆம் ஆண்டு கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானதற்கு பிறகு அவ்வப்போது வயிற்று வலியுடன் போராடி வருகிறார். எனினும், தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு அவர் பதவியேற்க தயாராக இருந்த போது, போல்சனாரோ பிரேஸிலில் இருந்து அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.