சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் மாலையில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
பின்னர் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் 3 முறை ஐயப்பன் காட்சி அளிப்பார். இந்த ஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். கூட்ட நெரிசல் காரணமாக ஜோதியை காண்பதில் பக்தர்களுக்கு சிரமம் இருக்கும்.
இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே சபரிமலைக்கு செல்லும் காட்டு பாதை பகுதியில் முகாமிட்டு அங்கேயே தங்குவது வழக்கம். அதன்படி பக்தர்கள் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதை உள்ளிட்ட பாதைகளில் கூடாரம் அமைப்பதில் நேற்றுமுன்தினம் முதல் ஆர்வம் காட்டினர்.
இதனால் சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இதில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்குகிறார்கள். இந்த பகுதியில் இருந்து பார்த்தால் பொன்னம்பல மேடு ஜோதி தரிசனம் தெளிவாக தெரியும் என்பதால் இங்கு தங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.