தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமென யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தமிழக கட்சிகளும் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஆரம்பிக்கப்பபட்ட இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த்தரப்புக்கள் மிக கவனமாகவும் அவதானமாகவும் இருக்கும் அதேநேரம் சிங்களத் தலைமைகள் ஓரளவு நேர்மையாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் யாழ் மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மூன்று தசாப்த காலப்போர் நிகழ்ந்து ஏறக்குறைய 13 ஆண்டுகளாயும் இன்னும் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில் நாட்டில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டும் என்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார்.