வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும் காட்டுப் பழங்களைச் சேகரித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டதாக அர்பிந்தாவில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
கடத்தல்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்தன. சஹேல் பகுதியில் உள்ள அர்பிந்தா, ஜிஹாதி கிளர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தலின் போது தப்பிய மூன்று பெண்கள் குறித்த சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதனை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளேயும் வெளியேயும் வீதிகள் ஜிஹாதிகளால் தடுக்கப்பட்டுள்ளன, உணவுப் பொருட்கள் குறைவாக இருப்பதால் கடுமையான பசி நிலைமை உள்ளது.
புர்கினா பாசோ முழுவதும் ஒரு தசாப்த கால கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயர வழிவகுத்துள்ளது. இராணுவம் கடந்த ஜனவரியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது, தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்தது, ஆனால் வன்முறை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.