நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், ‘நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த துக்க நேரத்தில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன’ என பதிவிட்டுள்ளார்.
5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் பயணித்த நேபாள பயணிகள் விமானம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய நேபாளத்தின் ரிசார்ட் நகரமான பொக்காராவில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஆற்றில் விழுந்து நொறுங்கியது.
இதில் பயணித்த 72 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை 68 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் காலையில் எஞ்சிய உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
எட்டி எயார்லைன்ஸின் 9N-ANC ATR-72 விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டு, தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பழைய விமான நிலையத்திற்கும் புதிய விமான நிலையத்திற்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.