சமூகங்களின் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் விடத்தல் தீவு கிராமத்திற்கான வரலாற்று வரவேற்பு வளைவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி விடத்தல் தீவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடத்தல்தீவு கிராமத்தின் தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்த மற்றும் புலத்திலுள்ள விடத்தல் தீவு மண்ணின் மைந்தர்களின் நிதிப்பங்களிப்பினூடாகவும், விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் பிரமாண்ட வரவேற்பு வளைவானது அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும் மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளரான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்து கொண்டார்.
விடத்தல் தீவின் பெருமைகளை பொதுவெளியில் வௌிப்படுத்தும் திறப்பு விழாவில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதானிகள் கலந்து கொண்டிருந்தனர்.
ஒன்றாக எழுந்து நின்று ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும் விடத்தில் தீவின் மானிடம் மாண்புறும் வகையில் இவ் வைபவம் அமைகிறது.
இக்கிராமத்திற்கு வந்தோரையும் ,வருவோரையும் வரவேற்கும் இவ் வரவேற்பு வளைவு எதிர் காலத்துக்கு வழிகாட்டும் வகையில் அமைவதை யே இங்குள்ளோர் எதிர்பார்க்கின்றனர்.