இந்தியாவுக்கு முதல் காலாண்டில் மூன்று நாட்டுத் தலைவர்கள் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர்களை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது.
அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்ரேலிய பிரதமரின் இரண்டாம் அதிகாரபூர்வ இல்லமான கிர்ரிபில்லி ஹவுஸில் புத்தாண்டு தின வரவேற்பு நிகழ்ச்சியில் அவுஸ்ரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற வரவேற்பின்போது ஆற்றிய உரையில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை அவருடைய இந்த விஜயத்தின்போது, இந்தியா -அவுஸ்ரேலியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயற்படுத்தப்படுவதால், இருதரப்பு வர்த்தகத்தில் முன்னேற்றத்தை இருதரப்பும் எதிர்பார்க்கும் நிலையில், அல்பானீஸ் வர்த்தக பிரதிநிதிகளுடன் விஜயம் செய்யவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த விஜயத்தின் திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த பயணத்தின் போது பெரிய அளவிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் இராஜதந்திர ஆலோசகர் இம்மானுவேல் போன் இடையேயான மூலோபாய பேச்சுவார்த்தை டெல்லியில் நிறைவடைந்தது.
பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, விண்வெளிக் கொள்கை, உக்ரேனில் உள்ள மோதல்கள் உட்பட இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் இந்திய – பிரெஞ்சு மூலோபாய கூட்டுறவின் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவின் 25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், இந்திய-பிரெஞ்சு மூலோபாயக் கூட்டாண்மையின் இலட்சிய விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் இலக்கு இந்தாண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
போன் தனது பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மற்றும் ஜெய்சங்கர், ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோரையும் சந்தித்தார். இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸின் முழு ஆதரவையும் அவர் வழங்குவதாக குறிப்பிட்டார்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சவால்களைச் சமாளிக்க இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பு முக்கியமாக இருக்கும் என்ற ஜனாதிபதி மக்ரோனின் செய்தியை தெரிவித்தார்,
இதற்கிடையில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் டெல்லி மற்றும் பெங்களுருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோல்ஸின் முதல் இந்தியா விஜயம் இதுவாகும்.