அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தும் இன அடிப்படையிலான பிரச்சினை, நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.