ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பணியில் தொடர்வதற்கான ஆற்றல் தன்னிடம் இல்லை என கூறி, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிக்குள் அவர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
மேலும், தனது தொழிலாளர் கட்சியில் இருந்து புதிய பிரதமர் பதவியேற்பார் என்றும் ஆர்டெர்ன் கூறினார். இது அவரது கட்சிக்கு ஒரு புதிய தலைவரை முன்கூட்டியே தேர்தலுக்கு தயார்படுத்த அனுமதிக்கும்.
நியூஸிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமரான ஆர்டெர்ன் 2017இல் 37 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இளம் உலகத் தலைவர்களில் ஒருவரானார்.
ஒரு வருடம் கழித்து, அவர் பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற போது, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது உலகத் தலைவர் ஆனார். அவர் 2020இல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னான மந்தநிலை, கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூடு மற்றும் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடிப்பு ஆகியவற்றினை சிறப்பாக கையாண்டதாக பாரட்டப்பட்ட ஆர்டெர்னின் உள்நாட்டுப் புகழ், சமீபத்திய மாதங்களில் குறைந்த அளவிற்கு சென்றுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.