தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.