இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் மீது உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வீட்டு பணியாளர் விக்கி என்பவர் மூலம் இன்று (திங்கட்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பிரிஜ் பூஷன் சரணின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக பொதுவெளியில் பாலியல் குற்றச்சாட்டை பொய்யாக வைத்ததற்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிஜ் பூஷன் சரண் மற்றும் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை கைவிட்டனர்.
பாலியல் உள்ளிட்ட வீரர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தரப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.