கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என முன்னளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட சமகால அரசியல் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ”கல்முனை உப பிரதேச விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது .தமிழ் தேசிய கூட்டமைப்பானது கல்முனை விடயம் தொடர்பில் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எட்டவில்லை.
நாங்கள் சகல மக்களையும் உள்வாங்கியுள்ள கட்சி என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுக்க விரும்புகின்றோம்.
கல்முனை விடயத்தை நேரடியாக எம்முடன் பேச வேண்டும்.அவ்வாறு பேச வரவில்லை ஆயின் தமிழ் மக்களுக்கு அவரால் நிரந்திர தீர்வொன்றினை பெற்றுகொடுக்க முடியாது.கல்முனை விவகாரத்தில் எமக்கு என்ன அதிகாரம் உள்ளது என்ற கேள்வியை உங்களால் கேட்க முடியும்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மக்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியை எவ்வாறு ஆதரித்து உள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரமரமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு எடுத்து காட்டாக அமையும்.
சாய்ந்தமருது விடயத்தில் கூட ஒரு போலியான விம்பத்தை தோற்றுவித்து மக்களை சிலர் திசைதிருப்ப பார்க்கின்றனர்.மாற்றத்திற்கான ஒரு வழியாக மக்கள் காங்கிரஸ் கட்சியை மக்கள் மயப்படுத்தி வருகின்றோம்.
இக்கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக இப்பகுதிகளில் உள்ள நிரந்திர பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.நிச்சயமாக அவ்வாறான விடயங்களை பெற்றுக்கொடுப்போம் என இவ்விடயத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் தேசிய கட்சிகளுடன் பொது உடன்பாடுகளை கொண்டு செயற்பட்டுள்ளேன்.வியாபார நோக்கோடு சில கட்சிகள் செயற்படுகின்றன.ஐக்கிய காங்கிரஸ் கட்சியானது சகல மக்களையும் இணைத்து செல்கின்ற ஒரு கட்சி.அதனால் தான் இன்று இணைந்து செயற்படுகின்றோம்.
எதிர்வரும் தேர்தலில் அதிக ஆசனங்களை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொண்டு ஏனைய கட்சிகளுக்கு சவாலாக அமையும்” என குறிப்பிட்டார்.