எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் வடகிழக்கு பகுதியானது, பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர் மற்றும் நேபாளத்துடன் 4,500 கிலோமீற்றர் நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
மூலோபாய ரீதியாக வட,கிழக்கு பகுதியானது ஆசியா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையேயான பாலமாக செயற்படுகிறது.
இப்பகுதியானது, ஆசியான, பிம்ஸ்ரிக், மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் மன்றம் போன்ற பல்வேறு சர்வதேச மன்றங்களில் செல்வாக்குச் செலுத்துவதோடு இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதற்கும் பயன்படுகின்றது.
2014 இல் மியான்மரில் நடைபெற்ற 12ஆவது ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி இதனை மையப்படுத்திய தனது கொள்கைளையும் அறிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆசியான் பகுதியும் ஜப்பானும் வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்களுக்கு தயாராக சந்தையாக செயற்பட முடியும்.
ஜப்பானிய முதலீடுகள் இரசாயனம், எந்திரவியல், மருந்துகள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கிய துறைகளில் காணப்படுகின்றன.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, தற்போது, ஆசியான் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும்.
மேலும் ஆசியான் உடனான வர்த்தகம் 2017இல் சுமார் 10சதவீதமாக அதிகரித்து 71.6 பில்லியனாக உள்ளது.
அத்துடன் 2017 இல் ஏற்றுமதி 24.3சதவீதமாக அதிகரித்து 31.07 பில்லியனாக உள்ளது.
அதேநேரம், இந்தியாவின் இம்முக்கிய பகுதியை துணைக் கண்ட நாடுகளுடன் இணைக்கும் பொருளாதார வழித்தடமாக மாற்றும் செயற்பாடும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அவுஸ்ரேலியா, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் சீனா உட்பட வியட்நாம் ஆகிய ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையே நவம்பர் 2020இல் கையெழுத்திட்ட பிராந்திய விரிவான பொருளாதாரக்கூட்டு ஒப்பந்தம் கருதப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் வரலாற்றில் முதல் கட்டற்ற வர்த்தக உடன்படிக்கையாக இது விளங்குகிறது.
ஏனெனில் இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.7 ட்ரில்லியன்கள் அதாவது 30சதவீதமாகும்.
இப்பகுதியின் மூலோபாய புவியியல் நன்மையைத் தவிர, எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள், நிலக்கரி இருப்பு போன்ற இயற்கை வளங்கள் போன்ற ஆற்றல்மிக்க உள்ளீட்டு சந்தை வினையூக்கிகள் காணப்படுவதும் முக்கியமானது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் 65,837 மெகாவாட் ஆற்றலைத் தவிர, 56,480 மெகாவாட் உணரப்படாத திறன் கொண்ட நாட்டின் 40சதவீத நீர் மின் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இப்பகுதியானது ‘இந்தியாவின் எதிர்கால சக்தி இல்லமாக’ மாறியுள்ளது.
வடகிழக்கு தேயிலைக்கு பிரபல்யமான இடமாக அறியப்படுகின்றபோதும் விவசாய பயிர்கள் மற்றும் பழங்களின் ஏற்றுமதிக்கு சமமான ஆற்றலையும் கொண்டுள்ளது.
இந்தியாவின் 34சதவீதமான நீர் வளங்கள் இப்பகுதியில் தான் அமைந்துள்ளன.
பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதி அமைப்புகள், கங்கையுடன் சேர்ந்து, உலகின் மிகப்பெரியளவில் காணப்படுவதோடு சீனா, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இந்த நதிப்படுகையை பகிர்ந்து கொள்கின்றன.
அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் உட்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களில் எட்டு மாநில தலைநகரங்களுக்கிடையில் உர்ஜா கங்கா எரிவாயு குழாய் திட்டம், 4,000 கிமீ வீதிகள், 20 ரயில்வே திட்டங்கள் மற்றும் 15 விமான இணைப்பு திட்டங்கள் ஆகியன முக்கியமானவையாகும்.
மேலும் சீனாவின் ஒரேபட்டிமற்றும் மண்டலம் முன்முயற்சியின் ஆழமான ஊடுருவலால் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இந்தியா சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனினும், வட,கிழக்குப் பகுதியின் விரைவான வளர்ச்சியானது, சீனாவின் திட்டத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பதோடு இப்பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலமாகக் மேம்படுவதற்கு உதவுகின்றது.