உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்று(வியாழக்கிழமை) மின்சார சபை அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே இன்று நண்பகல் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்காமை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ந்தும் மின்சாரம் வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் இணங்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.