அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் ரொகான் லக்சிறி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான வருமானவரிக் கொள்கை எம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. நாட்டின் நற்பிரஜைகளாக – நாட்டின் அபிவிருத்திக்காக வரி அறவிடப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.
ஆனாலும் இம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வரிக் கொள்கை நியாயமற்றதும், முறையற்றதுமாகும். இதனால் எமது சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலர் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு மாற்றாகக் கைக்கொள்ளத்தக்க திட்டங்களை எமது சம்மேளனம் அரசாங்கத்துக்கு முன்மொழிந்திருந்தது. ஆனால் அவற்றுக்கு அரசாங்கத் தரப்பிடமிருந்து எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை. இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சபையின் தலைவர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.
இதனால், சட்ட ரீதியாக எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். கடந்த 24.01.2023 அன்று கூடிய எமது பிரதிநிதிகள் சபை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை எமது உறுப்பினர்கள் பல்கலைக் கழகங்களில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்குபற்றுவதில்லை என்று முடிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.