உள்ளூராட்சி சபைத் தேர்தலினை குறித்த தினத்தில் நடாத்துவது தற்போது சிக்கலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டாலும், தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து P.S.M.சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது இராஜினாமா கடிதத்தை P.S.M.சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு P.S.M.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளமை காரணமாக தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானியினை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம் குறித்த வர்த்தமானியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட வேண்டும், அவ்வாறு கையொப்பமிடாமல் வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட முடியாது.
அவ்வாறு அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட வேண்டுமாயின் P.S.M.சார்ள்ஸின் இடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
21வது திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவையினால் மாத்திரமே சுயாதீன ஆணைக்குழுவான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் காணப்படுகின்றது.
எனவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும்.
அத்துடன், விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன் பின்னரே புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார்.
எனினும், தனது இராஜினாமா கடிதத்தை P.S.M.சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்ற உத்தியோப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
அவ்வாறு ஜனாதிபதி அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலினை குறித்த தினத்தில் நடாத்துவதில் சிக்கல் இருக்காது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஜனாதிபதி அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மாத்திரமே, மேற்குறிப்பிட்டவாறு சிக்கல் நிலை ஏற்பட்டு, தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளதன் பின்னணியில் தாங்கள் இல்லை என்பதனை மக்களுக்கு காட்டும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கையில் தாம் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை அழைத்து தேர்தலுக்கு தயாராகுமாறு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக தனது இராஜினாமா கடிதத்தை P.S.M.சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்ததன் பின்னரே, அவர் இவ்வாறான கருத்தினை வெளியிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடையும் போது, ஜனாதிபதி தேர்தலினை நடாத்த விரும்புகின்றார். எனினும், வேறு பல காரணங்களுக்காகவே தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது என மக்கள் நினைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணமாக இருகின்றது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கருத்துக்கள் வலுப்பெற பல்வேறு காரணங்களையும் அரசியல் அவதானிகள் முன்வைக்கின்றனர்.
குறிப்பாக P.S.M.சார்ள்ஸ், அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமானவர் எனவும், அவர் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமையவே தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார் எனவும் வெளியாகும் தகவல்கள் இதனை மேலும் வலுப்படுத்துகின்றது.
எனவே தேர்தலினை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாகவே P.S.M.சார்ள்ஸின் இராஜினாமாவை பார்க்க வேண்டி இருகின்றது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் 7 தடவைகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலினை ஒத்திவைக்க முயற்சித்ததாகவும், அவை பயனளிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் இவ்வாறாக சந்தேகங்கள் வலுப்பெற பிரதான காரணங்களாக அமைகின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னரும் தேர்தலினை ஒத்திவைக்கும் முயற்சிகளை அரசாங்கம் திரைமறைவில் முன்னெடுத்துள்ளமை குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
எது எப்படியோ தேர்தலினை ஒத்திவைக்கும் அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகாத பட்சத்தில், குறித்த திகதியில் தேர்தல் நடைபெறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
-யே.பெனிற்லஸ்-