உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்ட போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.