அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் ராட்சத சீன பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பூமியில் விழும் குப்பைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இது உளவு பார்க்கும் விமானம் அல்ல என மறுத்துள்ள சீன அதிகாரிகள், பொதுமக்களின் பலூன்களை தாக்க, அதிக பலத்தை அமெரிக்கா பயன்படுத்தியமைக்கு கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் சீனா வெளியிட்டுள்ளது.
உளவு பலூன் விவகாரம் பெய்ஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மோசமாக்கும் வகையில் தற்போது பரப்பப்பட்டு வருகின்றது.
அமெரிக்க கண்டத்தில் உள்ள மூலோபாய தளங்களைக் கண்காணிக்கும் முயற்சியில் சீனா, இந்த பலூன்களை அனுப்பி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச சட்டத்தை மீறும் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறும் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள கூடாது என தாய்வான் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க கண்டத்தின் பாதுகாப்பு அவசியம் என்றும் இதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.