அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தேவை என்றும், 13 அல்லது 13 பிளஸை அமுல்படுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இனவாதத்தையும் வன்முறையையும் விரும்பும் சிலர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை தூண்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களின் வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தமக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை என தெரிவித்த அவர், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்த தமது நிலைப்பாட்டை கடந்த தலைவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வௌ;வேறு விடயங்களை கூறிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட குறித்த எழுத்துபூர்வமான ஆவணத்தை தமக்கு தரவேண்டும் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அண்மைய தசாப்தங்களில் இலங்கை அரசியல் இனவாதத்தால் உந்தப்பட்ட இந்த சூழலில் தேர்தலும் நெருங்கி வருவதால் அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்துகின்றார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.