எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, மக்களுக்குக் கிடைத்த வெற்றி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக தீர்மானம் எடுத்து திட்டமிட்டபடி தேர்தலை நடத்த உறுதியளித்த இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ரஞ்சித் மத்தும பண்டார பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேர்தலுக்கு தேவையான நிதியை நிதி அமைச்சும் மத்திய வங்கியும் தற்போது வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் ஆதரவு இந்த அராசாங்கத்திற்கு இல்லாத இந்த சூழலில் நாடு முன்னோக்கிச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அவசியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.