இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கன், அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து உடனடியாக ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்தாண்டு ஜூன் 28ஆம் திகதி ஓய்வை அறிவித்தார்.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வின் பின்னர் பங்கேற்று வந்த, இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரட், அபுதாபி ரி-10 தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த எஸ்.ஏ.20 தொடர் உள்ளிட்ட அனைத்து லீக் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவே ஓய்வை அறிவிப்பதற்கு சரியான தருணம் என தெரிவித்த அவர், வர்ணனையாளர் போன்று எதாவது கிரிக்கெட் தொடர்பானதொன்றில் தொடர்ந்து ஈடுபடுவேன் என தெரிவித்தார்.
13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மோர்கன், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் முதல் 50 ஓவர்கள் உலகக்கிண்ணத்தை வென்றுக்கொடுத்தார்.
அப்போது அணியை வழிநடத்திய அவர், இங்கிலாந்து அணிக்காக 50 ஓவர்கள் உலகக்கிண்ணத்தை வென்றுக்கொடுத்த ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
இதுதவிர, 2010ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றிருந்தார்.