இந்தியன் வெல்ஸில் நடைபெறும் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டித் தொடரான, பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடரில் ஒஸ்திரிய வீரர் டொமினிக் தியெமுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள டொமினிக் தியெம், தான் விரும்பும் போட்டிக்கு கிடைத்திருப்பது நம்பமுடியாத செய்தி என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும் எனவும் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இறுதியாக டொமினிக் தியெம் இத்தொடரில் பங்கேற்று ஜாம்பவான் ரோஜர் பெடரரை வீழ்த்தி, முதல் மாஸ்டர்ஸ் 1000 சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். 29 வயதான டொமினிக் தீம், இத்தொடரில் 2014ஆம் ஆண்டு அறிமுகமானார்.
2021ஆம் ஆண்டு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தற்போது சிறந்த நிலைக்கு திரும்பியுள்ள தியெம், இந்த வாரம் பியூனஸ் அயர்ஸில் அர்ஜென்டினா பகிரங்க டென்னிஸ் தொடரில் போட்டியிடுகிறார். பெப்பர்ஸ்டோன் ஏடிபி தரவரிசையில் 99ஆவது இடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டுக்கான பிஎன்பி பரிபாஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.