பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 28.13 லட்சம் பேரும் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
31,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மத்தியப் படைகளைச் சேர்ந்த 25,000 பேரும் மாநில பொலிஸ் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்த 31,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண்குமார் தினகர்ராவ் தெரிவித்துள்ளார்.