பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
குறித்த பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நெடுஞ்சாலைகளை மறித்து டயர்களை எரித்து அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அரசின் பொருளாதாரக் கொள்கைத் தோல்வியால் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, இதனால் அங்கு பல பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
குறிப்பாக, குடிமக்களுக்கு மானிய விலையில் கோதுமை வழங்கும் அரசு முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
அங்கு ஒரே நாளில், கோதுமையின் விலையை 1,200 ரூபா உயர்த்தியுள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளும் வெற்றிடமாகியுள்ளன. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவருமே சோர்ந்து போனநிலையில் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர் என்று சமூக ஆர்வலரான அம்ஜத் அயூப் மிர்சா கூறினார்.
இவ்வாறான தருணத்தில், கடந்த ஏழரை தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருப்பதை இஸ்லாமாபாத் உறுதி செய்துள்ளது என்று போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாமாபாத் தம்மை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தவதாகவும், தங்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காவிட்டால், நிர்வாகத்தை செயல்பட விடமாட்டோம் எனவும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில், பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் பிராந்தியம் முழுவதும் பாரிய பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இழப்பீடு வழங்காமல் தனியார் நிலத்தை அரசு ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், மின்கட்டணத்தை எதிர்த்தும் அந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 22 மணிநேரம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன, இது அங்குள்ள வணிகங்களையும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
1947இல் பிரிட்டிஷ்-இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டைப் பெற்றதிலிருந்து இந்தப் பகுதிகளை பாகிஸ்தான் தவறாக ஆட்சி செய்து வருகிறது.
இங்குள்ள மக்கள், வரலாற்று ரீதியாக இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதாகவும், சமத்துவம் கேட்டால் மிரட்டலுக்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.