சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) சீன சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சீன சனத்தொகையில் நூற்றுக்கு ஒரு வீதமானோர் இலங்கைக்கு வருகை தந்தால் சமகால பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சக்தி வாய்ந்தது என குறிப்பிட்ட அவர் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் கிழமையொன்றுக்கு 9 விமானச் சேவைகள் மூலம் சீனாவின் மூன்று நகரங்களுக்கு விமானச் சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு (புதன்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.