இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழுவால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஸம்மில் உயிரிழந்துள்ளார்.
மாகாணத் தலைநகரான மசார்-இ ஷெரீப்பில் உள்ள அவரது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் நேற்று (வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் உயிரிழந்தார்.
2021இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொல்லப்பட்ட தலிபான்களின் மூத்த அதிகாரி இவர்தான்.
முஸம்மின் இழப்புக் குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமிய எதிரிகளால் வெடிகுண்டு வெடித்ததில் ஆளுநர் வீரமரணம் அடைந்தார்’ என்று பதிவிட்டுள்ளார்.
முஸம்மில், கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக முந்தைய பதவியில் இருந்தபோது ஐ.எஸ்-க்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த ஒக்டோபரில் அவர் பால்கிற்கு மாற்றப்பட்டார்.