மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன.
துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.
நல்லிணக்கத்திற்கான முயற்சியில் முதலாவதாக, இரு நாடுகளும் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாக தெரிவித்தன. அவர்கள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவுவார்கள்.
இந்த அறிவிப்பை அமெரிக்கா எச்சரிக்கையுடன் வரவேற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி,
‘பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் எந்தவொரு முயற்சியையும் நிர்வாகம் ஆதரிக்கின்றது. ரான் அவர்களின் கடமைகளை நிறைவேற்றப் போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்’ என கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முக்கிய காரணியாக இருந்த சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.
வளைகுடா பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு உதவ பொதுச்செயலாளர் தயாராக இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள இஸ்ரேல் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சவுதி ஒரு முக்கிய ஷியா முஸ்லீம் மதகுருவை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள அதன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து, ஜனவரி 2016இல் சவுதி அரேபியா உறவுகளை துண்டித்தது.
சன்னி மற்றும் ஷியா தலைமையிலான அண்டை நாடுகளுக்கு இடையே அடிக்கடி பதற்றம் இருந்து வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பிராந்திய மேலாதிக்கத்தை தேடும் ஒரு அச்சுறுத்தும் சக்தியாக கருதுகின்றனர்.
அவர்கள் லெபனான், சிரியா, ஈராக் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் போட்டியாளர்களை ஆதரிக்கின்றனர். மேலும் வெளிப்படையாக யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்துள்ளது.
2014இல் சவுதி ஆதரவுடைய அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய ஷியா ஹூதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் சவுதி அரேபியா அடுத்த ஆண்டு முதல் ஹூதிகளுக்கு எதிரான பேரழிவுகரமான வான்வழி தாக்குதல்களை வழிநடத்தியது.
ஹூதிகள் தாக்குதலுக்கு ஈரான் உதவுவதாகவும் சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வகையான மிக மோசமான சம்பவத்தில், 2019ஆம் ஆண்டில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சவுதியின் முக்கிய எண்ணெய் ஆலைகளைத் தாக்கியது, இதனால் உற்பத்திக்கு சேதம் மற்றும் இடையூறு ஏற்பட்டது. சவூதி அரேபியாவும் அதன் அமெரிக்க கூட்டாளியும் தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அதை ஈரான் மறுத்துவிட்டது.