ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில குழுக்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், இணைத்தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி போன்றதொரு கூட்டணியே தற்போதும் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இந்த கூட்டணியில் மைத்திரிபால சிறிசேன இணைத்துக் கொள்ளப்படமாட்டார் எனவும் கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினையும் இணை தலைமைத்துவத்தை ஏற்று புதிய கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அழைப்பை பரிசீலித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் இந்தக் கூட்டணியை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வேலைத்திட்டத்தை மிகவும் இரகசியமாக முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.