இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
எப்படி அனைத்து திருடர்களும் ´மோடி´ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தீர்ப்புக்கு முன்னதாக பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் இன்றே வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி காத்திருந்தார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளாதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 30 நாள்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.