இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20குழுவின் தலைமையை மிகவும் பொருத்தமான நேரத்தில் ஏற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போதைய நிலையில், சர்வதேச ரீதியாக முக்கியமான வகிபாகமொன்றைச் செய்வதற்கு இந்தியாவுக்கு பெருவாய்ப்பொன்று கிட்டியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் போது உலகப் பொருளாதார ஒழுங்கில் பங்கேற்று நிலைபேறான தன்மைக்கு ஒத்துழைப்பதற்கு முக்கியமான தருணம் கிடைத்துள்ளது.
ஜி-20 உச்சிமாநாடு ஆண்டுதோறும் சுழற்சித் தலைமையின் கீழாக நடைபெறுகிறது.
ஜி-20 ஆரம்பத்தில் பரந்த பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது, பின்னர் அது வர்த்தகம், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு என்று தனது விடயப்பரப்பினை விரிவு படுத்தியுள்ளது.
ஜி-20 நாடுகள் அமைப்பில், அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிக்கோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அங்கத்துவம் வகிக்கி;ன.
இந்த ஜி-20 கட்டமைப்பானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85சதவீதம் பங்களிப்புச் செய்வதோடு, உலகளாவிய வர்த்தகத்தில் 75சதவீதம் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி ஜி-20 இன் தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்ட இந்தியா எதிர்வரும் நவம்பர் 30, வரை அப்பதவியை வகிக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பரில் டில்லியில் நடைபெறுகின்ற ஜி-20இன் பிரதான மாநாட்டில் 43 தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
‘வசுதைவ குடும்பகம்’ என்ற முழக்கத்துடன், ஜி-20இன் தலைவர் பதவிக்கான ஓராண்டு பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் காலநிலை மாற்றம், நிதி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் காலநிலை உரையாடல், புத்தாக்கம் மற்றும் வணிக மாதிரிகளுக்கு குறித்த மாநாடு நிச்சயமாக பல மடங்கு உத்வேகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா தனது தனித்துவமான பாணியிலான தலைமைத்துவத்தினை வழங்கவுள்ளது. தனது பாரம்பரியங்கள் உள்ளிட்ட அடையாளங்களை கைவிடாது.
கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படவுள்ள இந்தியா, உத்தியை மாற்றிக் கொண்டாலும் எப்போதும் உண்மையாகவே இருக்கும். இது அதன் மதிப்புகள் மற்றும் அதன் நலன்கள் இரண்டிற்கும் மையமான விடயமாகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக கொரோனாவுக்குப் பிந்தைய பகுதியில், காலநிலை, பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் சமபங்கு ஆகியவற்றில் காணப்படுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கான விரிவான அணுகுமுறைகளுக்கான முயற்சிகள் விரும்பத்தக்கவையாகவுள்ளன.
32 வௌ;வேறு பணிநிலைகளில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை இந்தியா நடத்தும், மேலும் ஜி-20இன் பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களுக்கு இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய பார்வையை வழங்குவதோடு அவர்களுக்கு தனித்துவமான இந்திய அனுபவத்தையும் வழங்கும் வாய்ப்பையும் அளிக்கவுள்ளது.
இந்தியாவின் ஜி-20இக்கான தலைமைத்துவமானது, 2030 நிகழ்ச்சி நிரலின் முக்கியமான மையப் புள்ளியுடன் இணைந்துள்ளது. இது தற்போதைய தசாப்தத்தின் செயற்பாட்டை மீட்டெடுக்குமொரு அளப்பரிய செயற்பாடாக இருக்கப்போகின்றது.
இந்த முன்னோக்கிற்கு இணங்க, நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக ஜி-20 இன் முயற்சிகளை மீண்டும் உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், இந்தியாவின் ஜி-20க்கான தலைமையானது சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, இது மிகவும் பொறுப்பு வாய்ந்த, நியாயமான, சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவ பலமுனை சர்வதேச அமைப்பை உருவாக்குகின்றமை விசேடமாகும்.