இலங்கையின் நுரைச்சோலை மின் உற்பத்தித் திட்டத்தில் உள்ள ஜெனரேட்டர் அலகு பழுதடைந்துள்ளது. குறித்த அனல்மின் நிலையத்தின் அலகு-3 இல் தான் தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023 இல் அலகு-3 பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையிலேயே அது தற்போது பழுதடைந்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் கோளாறு ஏற்படுவது இது முதல் முறையல்ல.
நொரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல தடவைகள் செயலிழந்து வருகிறது.
இறுதியாக ஆகஸ்ட் 2022இல், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறைக் காரணம் காட்டி தினசரி மின்வெட்டை மூன்று மணிநேரமாக நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அந்த தினசரி மின்வெட்டு 2023 ஜனவரி இறுதி வரை நீடித்தது.
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின்நிலையமானது மூன்று ஜெனரேட்டர்களை உள்ளடக்கியது, மேலும் ஒவ்வொன்றும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து 900 மெஹாவோல்டடுக்களை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்குகின்றது.
உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் ஒரு பகுதியானது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதுடன், ஒரு அலகு மின் உற்பத்தியினால் 270 மெஹாவோல்ட் மின்சாரத்தை மட்டுமே தேசிய மின் கட்டமைப்பிற்கு பங்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலக்கரி அனல்மின் நிலையம் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்படுவதால் பாரிய செலவை இலங்கை அரசாங்கம் ஏற்கும் நிலைமைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
பழுதுபார்க்கும் முன் ஜெனரேட்டரின் அதிக வெப்பமான பகுதிகளை குளிர்விப்பதற்காக ஆலையை குறைந்தது 18 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும், இதனால் கணிசமான காலம் பழுபார்ப்பிற்காக தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீன தொழிநுட்ப இயக்குனரின் அலட்சியம் காரணமாக ஆலை அடிக்கடி பழுதடைந்து வருவதாக தொழில்நுட்ப பொறியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. குளிரூட்டும் அமைப்பு கடல் நீரைப் பயன்படுத்துவதும் பிரச்சினையாக விடயம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிற்சங்கங்கள் சர்வதேச விலை நிர்ணயத்தின்படி, மின் உற்பத்தி நிலையத்திற்கான செலவு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டன.
ஆனால் சீன ஒப்பந்தத்தில் இருந்து எஞ்சிய 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை யார் எடுத்தது என்று கேள்வி எழுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மின் உற்பத்தி நிலையத்தை பராமரித்து நிர்வகிப்பதற்கான பாரிய ஒப்பந்தத்தை தொடரும் நோக்கத்துடன் சீன நிறுவனம் தொழில்நுட்ப சிக்கல்களை உருவாக்குவதாகவும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் சந்தேகம் வெளியிடுகின்றது.
இதேநேரம், அநாமதேயமாக இருக்க விரும்பும் முக்கிய அதிகாரி ஒருவர், இந்த மின் நிலையம் தொழில்நுட்ப சிக்கல்களால் அல்ல, ஆனால் அதன் அமைப்பு இலங்கைக்கு பொருந்தாததாலும் தொழில்நுட்பமும் காலாவதியானதாலும் அடிக்கடி சிக்கல்களை ஏற்படுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 55 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. தேசிய மின்கலத்துடன் இணைக்கும் போது ஏற்பட்ட முறைமை செயலிழப்பே ஆலை இயங்காததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது.
அதன் பின்னர் கணிசமான இடைவெளியில் குறித்த மின்நிலையம் செயற்பாடுகளில் பலவீனமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இந்த அனல் மின்நிலையத்தினை தொடர்வது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் துறைசார் பற்றிய நிபுணர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு இது வெள்ளையானையாக மாறிவிட்டது.