புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றும் போது, புத்தரின் கோட்பாடு, நடைமுறை மற்றும் உணர்தல் ஆகிய வழிகளை இந்தியா பின்பற்றி வருவதாகக் கூறினார்.
இந்த மூன்று புள்ளிகளிலும் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது என குறிப்பிட்டார்.
‘அமிர்த மஹோத்சவ’ கொண்டாடும் வேளையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தான் உலக பௌத்த உச்சி மாநாடு நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வருகின்றமை மட்டுமின்றி, முழு உலகத்தின் நலனுக்காகவும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
‘வெற்றி, தோல்விகள், சண்டைகள், போர்கள் ஆகியவற்றின் உணர்வைத் துறந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியைத் தழுவ முடியும். புத்தபெருமான் இவற்றைக் கடக்கும் வழியைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
பகைமையை விடுத்து அன்பினை வெளிப்படுத்த வேண்டும். உண்மையான மகிழ்ச்சி அமைதியுடன் வாழ்வதில் உள்ளது என்று புத்தபெருமான் போதித்துள்ளார்.
உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், புத்தரின் கோட்பாடுகள் தான், முக்கியமாகின்றன.
குறுகிய நோக்கம் கொண்ட கோட்பாட்டுச் சிந்தனையை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி, அவற்றைப் பின்பற்றுவது தான் என்றும் அவர் கூறினார்.
புத்தரின் பாதை எதிர்காலத்தின் பாதை, நிலைத்திருக்கும் பாதை. புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றியிருந்தால், பருவநிலை மாற்றம் போன்ற நெருக்கடி கூட நம்முன் வந்திருக்காது. இந்த நெருக்கடி ஏற்பட்டமைக்கான காரணம் உள்ளது.
அதாவது, கடந்த நூற்றாண்டில், சில நாடுகள் மற்றவர்களைப் பற்றி, எதிர்கால தலைமுறையைப் பற்றி சிந்திக்கவில்லை. அதேவே நெருக்கடியான நிலைமைகள் உருவாகுவதற்கு காரணமாகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் அமைதிப் பணிகளாக இருந்தாலும் சரி, துருக்கியில் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களாக இருந்தாலும் சரி… ஒவ்வொரு நெருக்கடியான காலத்திலும் இந்தியா தனது முழுத் திறனை வெளிப்படுத்தி மனித நேயத்துடன் உடன் நிற்கிறது என்று குறிப்பிட்டார்.