எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே 20 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளானது.
கப்பலில் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் இருந்த நிலையில் அவற்றில் பல தீயின் போது அழிக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெற்ற சுற்றுச்சூழல் துறை மேற்பார்வைக் குழுவில், சம்பந்தப்பட்ட கப்பலுக்கு எதிராக வழக்குத் தொடர இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ளது என தெரியவந்தது.
இதன்படி, மொத்த சேதத்தை கணக்கிடுவதற்கு நிபுணர் குழுவிற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் நாரா நிறுவனத்திற்கு துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் அஜித் மான்னப்பெரும அறிவித்துள்ளார்.
6.2 பில்லியன் டொலர் இழப்பீடு பெறுவது தொடர்பான அறிக்கையை நிபுணர் குழு கடந்த வாரம் கடல் சுற்றாடல் அதிகாரசபைக்கு அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.